Ad Widget

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புடன் பேசத் தயார்! – ஹெல உறுமய

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தத் தயார் என மஹிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ratna thero aththuleeyaa

அத்தோடு,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது சம்பந்தமாக ஜே.வி.பி. உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் பேச்சு நடத்தத் தயார் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஜாதிக ஹெல உறுமயவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்குமிடையில் நேற்று பேச்சு நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில், ஐக்கிய தேசியக் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தலைமைத்துவ சபையின் தலைவர் கருஜயசூரிய மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஹெல உறுமய சார்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தின தேரர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் காணப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினைகள், அதிகாரப் பரவலாக்கல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது சம்பந்தமாகவே இதில் முக்கியமாக கலந்தோலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அத்துரலிய ரத்தின தேரர்,

“நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஐக்கியத் தேசியக் கட்சியுடன் நேற்று நடத்திய பேச்சு சுமூகமான முறையில் முடிவடைந்துள்ளது. ஆகவே, எதிர்க்காலத்தில் எமது இந்தத் தீர்மானங்கள் மற்றும் நாட்டிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தொர்பாக ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேசத்தயார்” என்று அவர் தெரிவித்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தப்படுமா? என வினவியமைக்கு – “ஆம். தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்திலேயே நாம் அனைவரும் காணப்படுகின்றோம். ஆகவே, அம்மக்களின் தீர்வு விடயம் குறித்து இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் எதிர்காலத்தில் நாம் கலந்தாலோசிக்கத் தயாராகவே உள்ளோம். அதேபோன்று, உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லாது கூட்டமைப்பினரும் எம்முடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும். இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாட்டால் மாத்திரமே சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.

Related Posts