Ad Widget

சம்பந்தனுடன் வட மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே இந்தச் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் கொழும்பு சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணசபையின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய நிதி உரியமுறையில் செலவு செய்யப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒதுக்கிய நிதியில் 58 சதவீதமான நிதியே செலவு செய்யப்பட்டு முடிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாலும், எஞ்சிய நிதி திரும்பிச் செல்லும் நிலையில் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்று சம்பந்தனிடம் மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் அதில் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் ஆராயவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, மாகாண சபை உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் 27ம் அல்லது 28ம் திகதிகளில் கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

Related Posts