கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவுக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் (Stephane Dion), குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை மேயர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தட்டு அரசுகளில் உள்ள உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் பேசும் போது இலங்கையில் நீடித்து நிலைத்து வரும் இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறையோடு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசும் போது கடந்த ஒக்ரோபர் முதல் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவும் சிறிலங்கா அரசும் கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கனடாவின் பங்களிப்பு முக்கியமாக அமைந்திருந்தது என்றும் அதற்காக கனடிய அரசுக்கு நன்றி சொல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டலாம் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.