சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

paravipanjan-2

paravipanjan

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் மக்களிடம் தெரிவித்ததையடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக இரவு – பகலாகத் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்னால் கடந்த சனிக்கிழமை காலை முதல் ஒன்றுகூடிய மக்கள், நேற்று வரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை நடத்துபவர்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக மக்கள் தெரிவித்திருந்தனர். அந்தப் பகுதியிலுள்ள மின் விளக்குகளை ஒளிரவிடாது அணைத்தனர். அத்தோடு வாகனங்களை வேகமாக செலுத்தி புழுதிகளையும் எழுப்பினர் என அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும், மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை அடைவதற்காகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மக்களுடைய போராட்டத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பங்கு கொள்வதால், அவர்களுக்கான உணவுகளை இராணுவ முகாம் முன்பாக சமைத்து உண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவா்களை புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த ஊடகவியாளர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர்.

இந்தநிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் சகிதம் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்களுடன் உரையாடினார். பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியபோது, இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் தீர்வு எட்டப்படாவிடில் மீண்டும் தாம் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சானில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளில் ஒரு பகுதி கடந்த மே மாதம் 10 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட போதிலும் 54 குடும்பங்களுக்கு சொந்தமான 180 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றன.

இதனையடுத்து காணி உரிமையாளர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளையும் விடுவிக்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி பரவிப்பாஞ்சான் முகாம் இராணுவத்தினரிடம் கடிதமொன்றைக் கையளித்திருந்தனர்.

இதற்கான பதில் வழங்கப்படாததை அடுத்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் இராணுவத்தினரைச் சந்தித்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை தாம் விடுவிக்க முடியாது எனவும் அரசே இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஜூலை மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் முன்னெடுத்த நிலையில் மாவட்ட அரச அதிபரின் வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் கடந்த ஜூலை மாதம் மாவட்ட செயலகத்திற்குச் சென்ற மக்கள் அரச அதிபரிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.

காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை பரவிப்பாஞ்சான் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts