சம்பந்தனின் படத்தை எரித்து காணமால் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நேற்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவறினால் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய அரசைப் போலவே நல்லாட்சி அரசும் இந்த விடயத்தில் தங்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடமும் மாதங்கள் பலவும் கடந்துள்ள போதிலும் வலிந்து காணாமல் போன தங்கள் உறவுகள் தொடர்பாக இதுவரை உண்மை நிலை கண்டறியப்படவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நடந்தது என்ன ? என்ற உண்மை நிலை கண்டறிப்படும் வரை மரண சான்றிதழோ அல்லது இல்லாமைக்கான சான்றிதழோ தாங்கள் பெறப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கான மனுக்களும் ஏற்பாட்டாளர்களினால் ஆளுநர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில், நிகழ்வு முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் படத்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களை விடுதலை செய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாங்கத்திடமிருந்து அதற்கான பதில் கிடைத்திருக்கும்.

அவ்வாறு அவர் செய்யத் தவறிய காரணத்தினாலேயே அவருடைய உருவப்படத்திற்கு எரியூட்டப்பட்டது என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Posts