Ad Widget

சமுர்த்தி முத்திரை மீளாய்வில் முறைகேடு மீளவும் மீளாய்வு

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி முத்திரை மீளாய்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, மீளவும் மீளாய்வு மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ்ப்பாண பிரதேச செயலாளரைப் பணித்துள்ளார்.

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி முத்திரை மீளாய்வு அண்மையில் நடைபெற்றது. அதன்போது பல் வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மீளாய்வுக்காகச் சென்ற பெண்களிடம், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கேள்விகளை – மன உளைச்சலை உருவாக்கும் கேள்விகளை, சமுர்த்தி மீளாய்வு செய்த உத்தியோகத்தர் கேட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மீளாய்வுக்காக மக்களை காலையில் அழைத்து மாலை வரையில் அலைக்கழித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

மீளாய்வின் போது, விதவைகள், கைவிடப்பட்டவர்கள், கூலி வேலைகள் செய்வோர் எனப் பலரது சமுர்த்தி நிவாரணமும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நிவாரணம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கேட்டால், தங்களுக்கு அது பற்றித் தெரியாது,சமுர்த்தி தலைமை முகாமையாளரே இவற்றைப் பார்க்கின்றார். அவரிடம் போய்க் கேளுங்கள் என்று கூறுகின்றனர். இது தொடர்பில் தமக்குத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் க.மகேஸ்வரனிடம் கேட்டபோது, இது தொடர்பில் தமக்கும் முறைப் பாடு கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அத்துடன் சமுர்த்தி மீளாய்வு, தனி ஒரு நபரால் மேற் கொள்ள முடியாது எனவும் அதற்கு குழு அமைக்கப்பட்டே செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதனால் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில், மீளாய்வுக் குழு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அரச அதிபர் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts