Ad Widget

சமுர்த்தி முத்திரையில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமந்திரனை சந்தித்தனர்

சமுர்த்தி முத்திரை வழங்குவதற்கான மீளாய்வின் போது தெரிவு செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, புதன்கிழமை (13) சந்தித்து முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது பாதிப்புக்களை எடுத்துக் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் தெய்வேந்திரன் சுகுணவதி மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கியின் தலைமை முகாமையாளர் ஆகியோர் தமது விருப்பப்படி சமுர்த்தி நிவாரண முத்திரை மீளாய்வை மேற்கொண்டு, கஷ்ரப்பட்டவர்களின் முத்திரைகளை நிறுத்தியுள்ளதாக மக்கள் கூறினர்.

இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் சமுர்த்தி நிவாரண முத்திரைகளை மீண்டும் வழங்குமாறும் கோரினர்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன், இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வாழ்வாதார உதவி ஆணையாளர் ஆகியோருடன் பேசுவதாகவும் அவ்வாறு உரிய பதில் கிடைக்காவிட்டால் கொழும்பிலுள்ள வாழ்வின் எழுச்சி உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் பேசுவதாகவும் கூறினார்.

Related Posts