Ad Widget

சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு – கபே

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது.

ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மக்கள் அனைவரும் இந்தநாட்டு பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்த 8 ஆம் திகதி அதிகாலை வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மகீன் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார்.

யாழ்.கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்கள் அனைவரும் சரியான முறையிலே தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். மக்களை தவறாக புரிந்துகொள்ள வைக்கும் பத்திரிகை விளம்பரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் குழப்பமின்றி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்.

வாக்காளிக்கும் ஒவ்வொருவரும் யாருக்கு வாக்களிக்கின்றனர், எந்தக்கட்சிக்கு வாக்களிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியாது.

எனவே மக்கள் அனைவரும் எந்த அச்சமோ பயமோ இன்றி வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்.

வாக்களிக்க செல்வோர்கள் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts