Ad Widget

சமுர்த்தியில் மோசடி : மனித உரிமை ஆணைக்குழுவில் மனு கையளிப்பு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் பிரிவிலுள்ள ஜே.61 தொடக்கம் ஜே.74 கிராமசேவையாளர் பிரிவு மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

நான்காயிரம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் உடைய தமக்கு ஏற்கனவே சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது . எனினும் மீளாய்வின் பின்னர் எமக்கு சமுர்த்தி நிறுத்தப்பட்டது.

இதனால் நாம் பெரிதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு பிரதேச செயலர் தெ.சுகுணரதியே காரணம்.

எனினும் எங்களுக்கு ஒரு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளும் நோக்குடன் நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் குறித்த பிரச்சினை தொடர்பில் மனு ஒன்றையும் கையளிக்க வந்துள்ளோம்.

மேலும் யாழ். பிரதேச சபையினால் அண்மையில் மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததில் சமுர்த்தி முத்திரை வெட்டப்பட்டவர்களது பெயர் விபரங்கள் இம்முறை கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தவில்லை.

அதன்படி சமுர்த்திப் பணம் வழங்கும் நிலையில் தான் தங்கள் பெயர் சமுர்த்தி முத்திரையிலிருந்து வெட்டப்பட்டுள்ளது என்று தெரிய வந்ததனை அடுத்து தாங்கள் பிரதேச சபைக்கு தாங்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டோம்.எமக்கும் சமுர்த்தி முத்திரை வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். ஆனால் இது தொடர்பில் அவர்கள் மீண்டும் கடிதம் மூலம் பதிலளிக்கையில் நீங்கள் வசதியானவர்கள் என்றதாலேயே உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்று காரணம் காட்டி மீண்டும் வசதியற்றவர்களுக்கே இந்த சமுர்த்தி முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் வறியவர்களான எமக்கு எந்த வசதிகளும் இல்லை.இந்த சமுர்த்தி உருவாக்கப்பட்டது வறியவர்களுக்கு உதவுவதற்குத் தான், ஏன் எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள்,இவர்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? வறியவர்கள் எங்களுடைய சமுர்த்தி முத்திரைகளை நிறுத்தி எப்படி வசதியானவர்களுக்கு கொடுக்க முடியும்? ஏன் ஏழைகளை பழிவாங்குகிறார்கள்.இனியும் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது எங்களுக்கு தீர்வு கிடைக்காவிடில் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயார் என்று மக்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related Posts