Ad Widget

சமுதாயத்தை நிர்மூலமாக்கி இளைய தலைமுறையின் சுதந்திர தாகத்தை அடக்க முயற்சி! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் எமது இளைய தலைமுறையினருக்கு சுதந்திர எண்ணம் எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினங்களாக நொவெம்பர் 25 முதல் டிசெம்பர் 10ம் திகதி வரை 16 நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு செயற்திட்டங்களும் விழிப்புணர்வு மகாநாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதிலே மிகமுக்கியமான ஒரு கருத்தை உங்கள் முன் சமர்ப்பிக்க ஆசைப் படுகின்றேன். வன்மம் என்பது எமது மனங்களிலேயே உறைந்து கிடக்கின்றது. மனதில் இருக்கும் வன்மந்தான் மறைவாகவும் மன்றிலும் அரங்கேறுகின்றன.

இதை நாங்கள் உணர்ந்து கொள்ளல் அவசியம். சிறு வயதில் இருந்தே எமது மனங்களில் வெறுப்பும், வன்மமான தப்பெண்ணங்களும் விதைக்கப் படுகின்றன. சாதி வழியில், சமய வழியில், பால் வழியில், இனவழியில் பிழையான எண்ணங்கள் எம் மனதில் விதைக்கப்படுகின்றன.

அவை பின்னர் அவகாசம் கிடைக்கும் போது, சந்தர்ப்பம் எழும்போது வன்செயலாகப் பரிணாமம் பெறுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறையும் எமது மனங்களில்த்தான் முதலில் எழுகின்றது. பெண்களைப் பற்றி எமது வயது முதிர்ந்தோர் தெரிந்தோ தெரியாமலோ சிந்தனை இல்லாமல்க் கூறும் வார்த்தைகள் எம்மனதில் படிகின்றன.

பெண்கள் அடக்கி ஆளப்படவேண்டியவர்கள், படுக்கை அறைக்கே பாவிக்கப்படவேண்டியவர்கள் என்று பலவிதமான கருத்துக்கள் எம் மனங்களில் விதைக்கப்பட்டதின் அறுவடையே அவர்களுக்கெதிரான வன்செயல்கள்.

அடுத்து எமது அண்மைய கால சரித்திரம் பெண்களுக்கெதிரானதாகப் பரிணாமம் பெறாதிருந்தாலும் பொதுவாக வன் சிந்தனைகளுக்கு வழி வகுப்பதாகவே அமைந்திருந்தன. எம்மைச் சுற்றி வன்செயல்கள், வன்சிந்தனைகள் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கையில் எமது மனங்கள் அந்த நீர்ச்சுழிக்குள் அகப்பட்டுப் போவது தடுக்க முடியாதது.

எனினும் அக்காலகட்டத்தில் பெண்களுக்கெதிரான வன் எண்ணங்கள் எழவிடாமல் வன்தடுப்பே ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது.

1980 களில் நான் மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இருந்த போது எனது நண்பர் ஒருவரின் மகன் எனக்குக் கூறியது ஞாபகத்திற்கு வருகின்றது.

ஒரு இயக்க இளைஞர் தனது கல்லூரி நண்பர்களைக் காண அவர் படித்த பழைய கல்லூரிக்குச் சென்றிருக்கின்றார். அவர்கள் கல்லூரிக்கு வெளியில் பேசிக் கொண்டிருக்கும் போது சில மாணவியர் அவ்வழியாகச் சென்றுள்ளார்கள். அவர்களைப் பற்றி இழிவாகவும் பால் ரீதியாகவும் பேசிப் பழித்திருக்கின்றார்கள் அம்மாணவர்கள். அடுத்த சில நாட்களுக்குப் பின்னர் இயக்க இளைஞர் அங்கு வந்த போது உடலில் காயக்கட்டுக்களுடன் வந்திருந்தார். ஏன் என்று கேட்ட போது தனக்குச் செமையடி கிடைத்ததாகவும் பெண்களைப் பழித்தால் இதுதான் தண்டனை என்று கூறப்பட்டதாகவும் அறிவித்தார்.

ஆகவே அக்கால கட்டத்தில் வன்சொற்களும் வன்முறைகளும் வன்மையாகவே கண்டிக்கப்பட்டன. அதனால்த்தான் நீண்ட காலமாகப் பெண்கள் எதுவித அச்சமோ அல்லது பயமோ இன்றி பகல் நேரத்திலும் சரி, இரவு நேரங்களிலும் சரி தனியாகவோ அன்றி கூட்டாகவோ தாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் எதுவித பிரச்சனைகளும் இன்றி சென்றுவரக் கூடிய ஒரு சூழ்நிலை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இப்பகுதியில் காணப்பட்டது.

அதே போன்று வீட்டிலும் ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற சச்சரவுகள் எழாதிருக்க வன்தண்டனைகள் காரணமாக அமைந்தன. வன்முறைக்கு எதிராகப் பயத்தையே ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்தினார்கள் நம் இளைஞர்கள். அதைச் சரியோ பிழையோ என்று நான் கூற வரவில்லை.

வன்சிந்தனைகள், வெறுப்பெண்ணங்கள், தப்பெண்ணங்கள் எழாது வாழக் கூடிய ஒரு சூழலையும் நாங்கள் ஏற்படுத்தலாம் என்று தான் நான் கூறவருகின்றேன். ஆனால் இப்பொழுது பெண்களுக்கெதிரான நடவடிக்கைகள் சம்பந்தமான வன்தடுப்புமுறை போய் தேக ரீதியாகவும் மனோ ரீதியாகவும் வன்செயல்களில் ஈடுபடக்கூடிய ஒரு சூழலை யாரோ வேண்டுமென்றே உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்களோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நீண்ட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்து ஓரிரு வருடங்களுக்கு உள்ளேயே நிலைமைகள் மிகக் கேவலமாக மாற்றம் பெற்று விட்டன. இதற்குப் பல உதாரணங்களை உங்கள் முன் வைக்கலாம்.

புங்குடுதீவு வித்தியாவின் கொலையிலிருந்து உடுவில் மூதாட்டியின் கொலை வரை பல்வேறு கொலைகள் வயது வித்தியாசங்கள் இன்றி நடைபெற்றுள்ளன. நான்கு வயதே நிரம்பிய சிறு குழந்தை கூட காமுகர்களின் ஈனச் செயலுக்குப் பலியானதை பத்திரிகைகள் வாயிலாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் அறியக் கூடியதாக இருந்தது. அது மட்டுமல்ல. வீட்டிலே பெண்களுக்குக் கணவர்களினால் துன்புறுத்தல், பெண்களுக்குப் பெண்களாலேயே துன்புறுத்தல், பால் ரீதியான பாதிப்புக்கள், வன்புணர்வுகள் எனப் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதை அறியக் கூடியதாக உள்ளது. இந்தியா போன்று சீதனக் கொடுமை இங்கு பெரியளவில் இல்லாத போதும் பெண்கள் மீதான வன்முறை வலுப்பெற்றிருப்பது மனதிற்குக் கவலை தருகின்ற ஒரு விடயமாக உள்ளது.

இவற்றை நாம் ஆழமாக ஆராய முற்படுகின்ற போது எம்மிடையே பல தீய செயல்கள் நன்கு திட்டமிடப்பட்டு வேண்டுமென்றே எமது இனத்தை அழிப்பதற்காக அரங்கேற்றப்படுகின்றனவோ என்று கேட்க வேண்டியுள்ளது. இப்போது தினசரி பத்திரிகைகளைப் பார்க்கும் போது மாதகலில் 100 கிலோ கஞ்சா கைப்பற்றல், மன்னாரில் போதைப்பொருளுடன் கைது, காக்கை தீவில் கஞ்சா கைப்பற்றல் எனச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. மாதகலில் உள்ள மக்கள் கஞ்சாத் தோட்டம் வளர்க்கின்றார்களா? மன்னார் எவ்வாறு போதைப் பொருள் விநியோகத் தலைமையகம் ஆகியது? எவ்வாறு இப் போதைப் பொருட்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன?

வடமாகாணத்தைச் சுற்றி 150000 இராணுவத்தினர் இரவு பகலாகக் கடமையில் உள்ளனர். அதற்கும் மேலாக பொலிஸார் பொது மக்கள் பாதுகாப்புத் தொடர்பாகச் சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரதும் கண்களில் மண்ணைத் தூவி விட்டா இப் போதைப் பொருட்கள் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்து இங்கு எடுத்து வரப்படுகின்றன? அல்லது இவர்களின் அனுசரணையுடன்தான் இவை இங்கு எடுத்து வரப்படுகின்றதா என்ற ஐயப்பாடு எம்முள் எழுகின்றன.

கடந்த சில மாதங்களாக எமக்கு கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளின் படி இங்கு கடத்தி வரப்படுகின்ற போதைப் பொருட்கள் அனைத்தும் பிற இடங்களில் இருந்து இங்கு வந்து காவற் கடமைகளில் ஈடுபட்டிருப்போரின் அனுசரணை உடனேயே மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரியவருகின்றது. அது மட்டுமல்ல. அவற்றை பாடசாலைகளில் கல்விகற்கின்ற மாணவர்கள் மத்தியில் விநியோகம் செய்வதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றது. ஒரு சில மாணவர்கள் முதலில் இப் போதைப் பொருட்கள் பாவனைக்குப் பயிற்றப்பட்டு பின்னர் அவர்களின் உதவியுடன் பாடசாலை மட்டங்களில் இந்தப் பாவிப்பானது பெரியளவில் அரங்கேற்றப்படுகின்றன என்று அறியவருகின்றது.

இவற்றிற்கு என்ன காரணம் என்ன என நாம் ஆராய்வோமானால் தமிழ் மக்கள் ஒழுக்க சீலர்களாகவும் பண்பாடு உடையவர்களாகவும் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்களாகவும் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள விரும்பாத சிலர் போதைப் பொருள் பாவனையை எம்மிடையே அறிமுகப்படுத்தி வருகின்றார்கள்.

ஏன் என்று பார்த்தோமானால் எமது இளைய சமுதாயத்தை நிர்மூலமாக்கினால்த்தான் சுதந்திர எண்ணங்கள் எமது இளைய இனத்தவரிடையே எழாது தடுக்கலாம் என்ற நப்பாசை சிலரிடம் இருந்து வருகின்றது. எமது பெண்களை நுகர் பொருட்களாக்கிப் புலன் நுகர்ச்சியை இளைய சமுதாயத்தினரிடையே பரவவிட்டால் மாணவ சமுதாயத்தின் கல்வியில் கைவைக்கலாம், பாரம்பரியங்களைப் பழித்தொதுக்கலாம் என்று நடவடிக்கைகள் முடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் ஒரு செய்தி கேட்டேன். வன்னியில் வலோத்காரமாக கையடக்கத் தொலைபேசிகள் இளம் விதவைப் பெண்களிடம் இனாமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றனவாம். அப்பெண்களின் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்படுகின்றனவாம். அவற்றை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கேள்வி. பயிற்றப்பட்ட பின் சந்திப்பிடங்களுக்குச் சரசமாட அழைக்கப்படுகின்றார்கள். போகாதிருக்க முடியாது. போய்வந்து பொலிசுக்கு முறைப்பாடு செய்ய முடியாது. முறைப்பாடுகள் ஏற்கப்படாவாம். இன்றைய நிலை இது. நாங்கள் எங்கள் இளைய சமுதாயத்தினரையும் பெண்களையும் காப்பாற்ற வேண்டிய ஒரு காலகட்டமாக இன்றைய காலம் பரிணமித்துள்ளது.

எனவே தான் நான் செல்லும் இடங்களிலெல்லாம் இவ் விடயங்கள் பற்றியும் மாணவ சமுதாயத்தை எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவர்கள் மீது ஆசிரியர்களும் பெற்றோரும் காட்ட வேண்டிய அன்பையும் அனுசரணையையும் பற்றிப் பேசி வருகின்றேன். எம்முன் விரிந்து கிடப்பதோ பூதாகரமான ஒரு பிரச்சனை. இதனை நாம் விரைந்து முடிவுக்கு கொண்டுவராவிடின் எமது இளைய சமுதாயமும் பெண் வர்க்கத்தினரும் இங்கு பாதுகாப்புடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படக் கூடும். ஏற்பட்டுள்ளது என்று கூடக் கூறலாம்.

எனவே பெற்றோர்களே, பெண் சகோதரிகளே பாடசாலை மாணவ மாணவியர்களே, குழந்தைகளே நீங்கள் யாவரும் மிகவும் விழிப்புடன் இருங்கள். குழந்தைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் எல்லோரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களின் செயல்களில் மாற்றங்கள் தெரிகின்ற போது விரைந்து செயற்பட்டு அவர்களை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுங்கள்.

குழந்தைகளே! நீங்கள் இனந்தெரியாதவர்கள், அன்னியர்களுடன் பழகுவதை இயலக் கூடியளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இனிக்க இனிக்க பலர் பேச முற்படுவர் புதிய பதார்த்தங்களை உண்ணத் தருவார்கள். தேவையற்ற ஆபாசக் காட்சிகளை உங்கள் முன் வைக்க முற்படுவார்கள். இவை எல்லாவற்றிலுமிருந்து தப்பிக் கொண்டு கல்வியையே கண்ணாகக் கொண்டு முன்னேற வேண்டியது உங்கள் பொறுப்பு. கல்வியில் கூடிய சிரத்தை எடுத்தீர்களானால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகின்ற இந்த மாயைகள் அனைத்தும் கானல் நீர் போல மறைந்துவிடுவன.

எம்மனங்களில் மாண்பானது மலர்ந்தால் மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை நாம் மட்டித்து விடலாம். ஆகவே வன் எண்ணங்களை நாம் நம் மனதில் இருந்து முதலில் விரட்டியடிப்போம். வலோத்காரத்திற்கு வித்திடும் வக்கிர வஸ்துக்களைப் புறந்தள்ளுவோம்.

வளமான எதிர்காலத்தை நாம் அமைக்க வேண்டுமானால் அதில் பெண்கள் கண்ணியமான ஒரு இடத்தைப் பெற வேண்டும். கண்ணியமாகப் பெண்கள் நடாத்தப்பட வேண்டும். நடைமுறையில் பெண்களுக்கெதிராக நடந்து கொள்வதானது வன்புணர்வு, வன்செயல், பாலியல்த் தொல்லைகள், பெண்சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தல் போன்ற பலதையும் உள்ளடக்கிய செயல்களாக அமைந்துள்ளன.

இவற்றை நீக்கி பெண்களைப் பெருமையுடனும் பெறுமதியுடனும் நடத்தலாம் என்ற எண்ணத்தை நாங்கள் எம் மக்களிடையே பரப்புவது அவசியம். பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதை நாம் ஏற்க வேண்டும். மனதில் இருந்து முதலில் தவறான எண்ணங்கள் களையப்பட வேண்டும்.எம்மைப் பெற்ற தாய்மார்களைப் போன்றவர்களே பெண்கள் என்ற எண்ணம் எம்மிடையே தலைதூக்க வேண்டும். பெண்களைக் கண்ணியமாக நடத்தினால் வாழ்வு வளம்பெறும், வருங்காலம் சிறப்பாக அமையும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts