Ad Widget

சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! – சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது. எனினும் தேசியக்கட்சிகள், தேசியப்பட்டியலில் பெண்களுக்கு இடங்களை வழங்கவில்லை.

தற்போதைய தேசிய அரசாங்கம் என்ற விடயம், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டமையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதில் அக்கறையில்லை. தேசிய அரசாங்கம் தற்போது தேவையா? இல்லையா? என்பது குறித்த இரண்டு கட்சிகளையும் பொறுத்த விடயம். ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எமது கட்சியை கோரவில்லை.

இதேவேளை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஆதரவை ஐக்கிய தேசியக்கட்சி கோரினால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும். ஏனெனில் ஜனவரி 8ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுத்த திட்டத்துக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்கினார்கள் என்ற அடிப்படையில் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கும். எனினும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் தமது கட்சி அமைச்சுக்களை பொறுப்பேற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts