Ad Widget

சமஷ்டி அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும்!

“ஒற்றையாட்சி முறைமை, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும். தற்போதைய அரசமைப்பைக் கொண்டு இதைச் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்புத் தேவைப்படுகின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதத்துடன்தான் நடக்கவேண்டும். அதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த முழுநாள் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விரிவுரையாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் ஆறாவது திருத்தம் காரணமாக தமிழர் பிரதிநிதிகள் இழக்கப்பட்டபோதும்,13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக அது ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த இடைவெளியை நிவர்த்தி செய்தது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் நான்கு விடயங்களை நீக்கும் முயற்சிக்கு ரவூப் ஹக்கீம் எதிர்ப்புத் தெரிவித்தார். அதை நான் வரவேற்கிறேன்.

அதிகாரம் அர்த்தமுடையதாகப் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அரசமைப்பு தொடர்பான நிலைப்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைந்து நிற்கின்றன. இந்த நிலைப்பாடுதான் எம் இரண்டு இனங்களுக்கும் வெற்றியைக் கொண்டு வரும்.

இலங்கையால் உருவாக்கப்பட்ட இரண்டு அரசமைப்பிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால்தான் யுத்தமே உருவானது. பெரும்பான்மைதான் ஆள வேண்டும் என்பதுதான் ஜனநாயகம் என்றாலும் கூட, பேரினவாத ஆட்சியாக அது இருக்க முடியாது. இந்தப் பேரினவாத ஆட்சியைக் கொண்டு செல்வதற்காகத்தான் 13ஆவது திருத்தச்சட்டமும் கொண்டு வரப்பட்டது. இதனால்தான் மாகாண சபையும் தோல்வியடைந்தது.

மாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடம்தான் உண்டு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் இல்லை. மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகனங்களும் தனி அறைகளும் ஒதுக்கிக் கொடுத்து சில விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வேலையைத்தான் இந்த மாகாண சபை செய்கின்றது.

ஆகவேதான், இந்த அரசமைப்பு மாற்றப்பட வேண்டியுள்ளது. தற்போதைய அரசமைப்பு ஒருபோதும் அதிகாரப் பகிர்வை நோக்கிச் செல்லாது. அது பேரினவாத ஆட்சியையே மேலும் விஸ்தரிக்கும். ஒற்றையாட்சி, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் குவித்தல் போன்றவை ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்காது.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை சிறுபான்மை இன மக்களுக்கு சாதகமானது என சிலர் கருதுகின்றனர். இரண்டு பிரதான கட்சிகளும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதால் அதைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருப்பர். அப்போது அந்த ஜனாதிபதி தமக்கு சாதகமாக இருப்பார் என சிலர் கருதுகின்றனர். அது பிழையானது. தேர்தல் முடிந்தால் எல்லாம் முடிந்துவிடும். சிங்களவர்கள் பாதகமாக நினைக்கும் ஒன்றை அவர் தமிழர்களுக்காகச் செய்யமாட்டார்.

ஆகவே, அதிகாரப் பகிர்வு உரிய முறையில் அமைய வேண்டும் என்றால் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். ஒரு தனி மனிதனின் கைகளில் அதிகாரம் குவிந்து கிடக்கும்போது அது அதிகாரத்தைப் பகிர்வதற்குத் தடையாகவே இருக்கும்.

அதேபோல், அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் குவித்தாலும் அது சிக்கலான விடயமே. அதுவும் அதிகாரப் பகிர்வுக்கு உதவாது. ஓரிடத்தில் அதிகாரம் குவிந்து கிடப்பதும் அதிகாரப் பகிர்வு ஆகாது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு முழுமையான தடையாக இருப்பது ஒற்றையாட்சி முறைமைதான்.

ஒற்றையாட்சி முறைமை மற்றும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும்” – என்றார்.

Related Posts