Ad Widget

சமஷ்டிக் கோரிக்கைக்கு மக்களாதரவு உள்ளதா என சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது! – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முன்வைத்துள்ளது. அத்துடன் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எதனையும் செய்யத் தைரியமும், திறமையும் இல்லாதவர்கள், எம்மைக் குறை கூறி காலத்தைக் கழிக்கின்றனர். தம்மிடம் எதுவும் சொந்தமாக இல்லாத வெறுமையின் காழ்ப்புணர்ச்சியை, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். போர் முடிந்தது முதல் நாம் மக்களுடன் இருக்கின்றோம். மக்களுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வழக்குகள் மூலம் மக்களுக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், தேர்தல் வந்ததும், திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள் போன்று திடீர் என்று வடக்கு, கிழக்கில் முகாமிட்டு எம்மைத் திட்டித் தீர்த்துக் காலத்தை ஓட்டுகின்றனர். நேற்று வரை தமிழர்களைத் திரும்பிக் கூடப் பார்க்காத இவர்கள், தேர்தல் முடிந்த மறுகையோடு தமிழர்களை மறந்து விடுவார்கள். தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாமல், வெறுமனே விமர்சித்துக் கொண்டும், குறை கூறிக்கொண்டும் இருப்பது முறையல்ல. தம்மிடமுள்ள மாற்றீடு என்ன என்பதனைச் சொல்லவேண்டும்.

ஆனால், அவர்களால் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வை விட சிறந்த சாத்தியமான தீர்வை இவர்களால் மட்டுமல்ல, யாராலும் முன்வைக்க முடியாது. தமிழ் மக்கள் நாம் முன்வைத்துள்ள தீர்வை எந்த அளவு ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை உலக நாடுகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களில் யாராவது ஒரு சிலர் தமது வாக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்காமல், தவறியேனும் கொள்கை இல்லாதவர்களுக்கு வழங்கினால், அவை தீர்வுக்கு எதிரான வாக்குகளாகப் பார்க்கப்படுவதுடன், தமிழர்களே தீர்வை விரும்பவில்லை என்று வழங்கிய அங்கீகாரமாகவும் கருதப்பட்டுவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு தீர்க்கமான சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Posts