Ad Widget

சபை அமர்வைக் குழப்பும் மஹிந்த அணியின் வியூகத்தை முறியடித்தார் ரணில்! – சட்டமூலத்தை நிறைவேற்றி அரசு அதிரடி

செங்கோலை தூக்கிச்சென்று சபை நடவடிக்கைகளைக் குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த திட்டத்தை முறியடித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு.

இதனால் சபைக்கு நடுவில் கூட்டாக களமிறங்கி சபா பீடத்தை சூழ்ந்துகொண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு ஊளையிட்ட மஹிந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்குமாறும் அங்கீகாரம் வழங்குமாறும் வலியுறுத்தி மஹிந்த அணி முன்னெடுத்த போராட்டத்தாலேயே சபையில் நேற்று இந்நிலை உருவாகியது.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பமாகவிருந்தது. இதன்போதே சர்ச்சைக்கு துவக்கப்புள்ளி வைத்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி.

சபாநாயகரிடம் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறும், சிறப்புரிமைகளை வழங்குமாறு கோரியும் 51 எம்.பிக்களின் கையொப்பத்துடன் உங்களுக்கு (சபாநாயகருக்கு) கடிதம் கையளிக்கப்பட்டது.

ஆனால், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களாக இழுத்தடிப்பு நடக்கிறது. கருத்து வெளியிடுவதற்கு நேரம் வழங்கப்படாமையானது ஜனநாயக விரோதச் செயலாகும். இனியும் பொறுமை காக்க முடியாது. இன்று (நேற்று) எமக்கு நீதியான நிலையான தீர்ப்பொன்று அவசியம் என வாதிட்டார்.

களத்தில் இறங்கிய தினேஷ் விமல் இவ்வாறு ஆவேசமாக பேசியதையடுத்து மஹிந்த அணி எம்.பிக்கள் கதிரையில் எழுந்து நின்று எதிர்ப்பைக் காட்டதயாராகினர். அமருமாறு சைகை காட்டிவிட்டு கருத்து வெளியிடுவதற்கு எழுந்தார் தினேஷ் எம்.பி.

“சுயாதீன குழுவாக அங்கீகரித்து நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புரிமைகளை வழங்குமாறு சபாநாயகரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் இன்றும் (நேற்றும்) பல சுற்றுப்பேச்சுகள் நடந்தன. ஆனால், தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சபை நடவடிக்கைகளை இப்படியே கொண்டுசெல்ல முடியாது. இன்றே ஒரு முடிவு அவசியம்” என்றார் தினேஷ் குணவர்தன எம்.பி.

விமல், தினேஷ் ஆகிய இருவருக்கும் பதிலடி கொடுப்பதற்கு எழுந்த பிரதமர், வரலாற்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

“கூடுதல்நேரம் வழங்குவதில் எமக்குப் பிரச்சினை இல்லை. நாடாளுமன்ற அமர்வு நேரம் நீடிக்கப்பட்டாலும் பரவாயில்லை. நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சிதான் இருக்கமுடியும். ஆளும் தரப்புக்கு அடுத்தபடியாக ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே அந்தப் பதவி உரித்தாகும். எனவே, வெளியில் வேண்டுமானால் பொது எதிரணி எனக் கூறிக்கொள்ளுங்கள். உட்கட்சிப் பிரச்சினையை தீர்த்துவிட்டு வாருங்கள்” என்றார் பிரதமர்.

1956, 1977 ஆகிய ஆண்டுகளில் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கிய விளக்கத்தால் கடுப்பாகினார் பந்துல குணவர்தன எம்.பி. 1989ஆம் ஆண்டு சிலர் சுயாதீனமாகச் செயற்பட்டனர். இதற்கு அனுமதி வழங்கப்பட்டது என வாதிட்டார் அவர். எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம். சுயாதீனமாக செயற்பட அனுமதி வழங்குங்கள் என்றும் கோரினார் பந்துல குணவர்தன.

பந்துலவின் கருத்துக்கு ஆட்சேபனை வெளியிட்டார் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல.

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறினால் இவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க முடியும். மாறாக, இவர்கள் தேவைக்கு ஆடமுடியாது” என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கடும் சொற்போரில் ஈடுபட்டதால் சபாநாயகர் தலையிட்டார். இது பற்றி தனது நிலைப்பாட்டை அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“நேரம் வழங்கும் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை நாம் ஏற்கிறோம். எனினும், உள்ளகப் பிரச்சினையை முதலில் தீர்த்துவிட்டு வாருங்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சீர்குலைத்து அந்தச் சாபத்துக்கு என்னால் உள்ளாக முடியாது” என்றார் சபாநாயகர்.

செங்கோலை தூக்க முயற்சி சபாநாயகர் இவ்வாறு உரையாற்றிக்கொண்டிருக்கையில், மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் கூட்டாக எழுந்து சபைக்கு நடுவே வந்தனர். செங்கோலை தூக்குவதற்காக சபாபீடத்தை அவர்கள் முற்றுகையிட முயற்சித்தனர். எனினும், படைக்கள சேவிதர்கள் ஓடிவந்து செங்கோலை சூழ்ந்துகொண்டு அதற்கு பாதுகாப்பு வழங்கினர்.

தமது கோரிக்கைக்கு சபாநாயகர் உரிய தீர்ப்பை வழங்காததால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை நிறைவேற்றவிடாது சபை அமர்வை குழப்பியடிப்பதே மஹிந்த அணியின் இலக்காக இருந்தது.

எனினும், இதை அறிந்துகொண்ட ரணில் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக அவசர வியூகங்களை வகுத்தார்.

சட்டமூலம் மீதான விவாதத்தை தானே ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். பிரதமரின் உரையைக் குழப்புவதற்கு தடுப்பதற்கு மஹிந்த அணி படாதபாடுபட்டது. ஆனாலும் அவர் ஓயவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். தனது உரை முடிவடைவதற்கு முன்னர் அடுத்த பேச்சாளரைத் தயாராகுமாறு கட்டளையிட்டார்.

பிரதமருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உற்சாகமளித்தனர். மஹிந்த அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

பிரதமரின் கட்டளைக்கு அமைய தனது உரையைத் தொடர்ந்தார் மகளிர் விவகார அமைச்சர். இதனால் கடுப்பாகிய மஹிந்த அணியினர் ‘ஊ’ என சத்தமெழுப்பினர். பலமாக சத்தமிட்டனர். எமது உரிமை எமக்கு வேண்டும் என்றும் கோஷமெழுப்பினர். பதிலுக்கு சபைக்கு நடுவில் நின்ற ஆளும் கட்சி எம்.பிக்களும் மஹிந்த அணிக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் சொற்போர் களமாகக் காட்சியளித்தது நாடாளுமன்றம்.

மகளிர் அமைச்சரின் பேச்சையடுத்து அனோமா கமகே, மாவை சேனாதிராஜா, பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றினர். இவர்களின் குரலை நசுக்குவதற்கு மஹிந்த அணி கடும் பிரயத்தனம் மேற்கொண்டது. ஆனால், அரச தரப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை.

இறுதியில் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஒரு மணிக்கு ஆரம்பமான சபை அமர்வு பி.ப. 3.05 இற்கு நிறைவடைந்தது. சபையைக் குழப்புவதற்கு மஹிந்த அணி போட்ட திட்டமும் தோல்வி கண்டது.

சபைக்குள் நடப்பவற்றை ஜே.வி.பி. உறுப்பினர்கள் படமெடுத்த வண்ணமிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

Related Posts