Ad Widget

சபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எதிர்க்கட்சி தலைவர்களாக இருவர் உள்ளனர். இதனால் சபாநாயகர் எடுத்த முடிவு குறித்து கேள்வி எழுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழரசுக் கட்சியைவிட கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனரா?

சுதந்திர கட்சி மற்றும் சுதந்திர முன்னணி இந்த அரசாங்கத்தின் பங்காளிகள். அதன் தலைவர் அரச தலைவர். அவர்கள் அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுத்நதிர முன்னணியின் சின்னத்தின் கீழேயே அவர்கள் நாடாளுமன்ற உறுப்பி;னர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுப்பீர்கள்? இது நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல்.

எமது நாட்டின் அரசியலமைப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டது. அதன்போது நீதித்துறையின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது. நீதித்துறையின் அறிவிப்பின் பிரகாரமே பிரதமர் பதவியேற்றார்.

இந்நிலையில், சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்டவருக்கு நடாளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை. உங்கள் தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது.

இதனால், புதிய அரசியலமைப்பை நாடுகின்றோம். அதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளும் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளும் தீர்வு காணப்படும். அத்தோடு, அரசியலமைப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Posts