Ad Widget

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

நெல்லியடியிலுள்ள குறித்த தனியார் மருத்துவனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண்ணொருவர் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், தனியார் மருத்துவமனையில் பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts