Ad Widget

சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – எஸ்.விஜயகாந்

இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒளடதங்கள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையும் அதன் அடிப்படையில் ஒரு சுதந்திரமான அதிகாரசபை அமைக்கப்படுவதையும் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதுடன் இது சீரான முறையில் அமூல்படுத்தப்படுவதன் மூலம் இலவச மருத்துவ சேவையில் வரப்பிரசாதங்கள் முழுமையாகக் கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார்.

s-vijayakanth

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை,

இலங்கையில் முப்பதாயிரம் மருந்தகங்கள் இயங்கி வருவதாகவும் இவற்றில் ஏறக்குறைய இருபத்திமூன்றாயிரம் மருந்தகங்கள் முறையாக பதிவுசெய்யப்படாதவை எனவும் அறிகின்றோம்.

இந்த நிலைமை நோயாளிகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தை நிராகரிக்கும் ஒரு நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் பல இறக்குமதியாளர்கள் தரமற்ற மருந்துகளை சந்தையில் உலாவ விட்டமையும் நாம் அறிவோம்.

எனவே அதிகாரசபை இந்த விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி பாராபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்

கடந்த கலங்களில் யாழ். போதனா மருத்துவமனையில் முறையற்ற நிர்வாகம் காரணமாகவும் அரசியல் தலையீடுகள் காரணமாகவும் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.

அதன் காரணமாக மருத்துவர்களும், பணியாளர்களும், நோயாளர்களும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாம் எதிர்பார்கின்றோம்.

ஏ-9 பாதை திறக்கப்படுவதற்கு முன்பு யாழ். போதனா மருத்துவமனை யாழ் மாவட்ட மக்களுக்கே தனது சேவையை வழங்கக் கூடியதாக இருந்தது.

இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட மருத்துவமனைகளின் கடுமையான நோயாளிகளும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். மருத்துவமனைக்கே அனுப்பப்படுகின்றனர்.

எனவே மருத்துவர்கள், தாதியர்கள், மருந்துவகைகள், சத்திரசிகிச்சைக்கூடங்கள் உட்பட ஏனைய வசதிகள் என்பவற்றில் பெரும் வளப்பற்றாக்குறை நிலவுகின்றது.

பல விலையுயர்ந்த மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.

வெளிநோயாளர் பிரிவுகளில் வழங்கப்படும் மருந்துகளுக்கு கூடத் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகின்றது. இவை போதிய கையிருப்பு இல்லை எனக் கூறப்படுகின்றது.

புற்றுநோய் மருந்தை இலவசமாகப் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் நோயாளிகளுக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தக் கூடும். மேலும் முழுமையான இரத்தப்பரிசோதனை செய்யும் வசதியும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்திரசிகிச்சைக்கான நோயாளிகள் கூட மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே வடமாகாணத்தின் பிரதான மருத்துவமனையான யாழ். போதனா வைத்தியசலையில் குறைபாடுகள் களையப்பட்டு சீர்செய்யப்பட உரிய அதிகாரசபை துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடபகுதி மக்களின் சார்பாக முற்போக்குத் தமிழ் தேசியக்கட்சியினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts