பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் (08) காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது.

இதில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளரான இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்கக் கோரியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ்,வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகரசபை பதில் தவிசாளர் நா. பத்மநாதன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அரசியல், சிவில் சமூக தரப்பினர் பாடகர் சங்கீத் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.