Ad Widget

சங்கானையில் கொல்களம் முற்றுகை : 400Kg மாட்டு இறைச்சி மீட்பு!!

சங்கானைப் பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை, ஞாயிற்றுக்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அங்கு இறைச்சியாக்கப்பட்ட 400 கிலோகிராம் மாட்டு இறைச்சியை கைப்பற்றிய பொலிஸார், இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஏழாலை, சுன்னாகம், மாசியப்பிட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு பசுக்களை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர்.

அத்துடன், இறைச்சிகளை இடமாற்றுவதற்காக சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட அனுமதிபத்திரம், இறப்பர் முத்திரை என்பவற்றையும் இதன் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சங்கானைப்பகுதியிலுள்ள வீடு முற்றுகையிடப்பட்டது.

பிரதேச சபையூடாக பொதுச்சுகாதார பரிசோதகர் வழங்கும் இறப்பர் முத்திரையை தயாரித்து குறித்த நபர்கள் இவ்வாறு இறைச்சிகளை விநியோகித்து வந்துள்ளனர்.

கைதான ஏழு பேரும் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts