Ad Widget

சக மாணவர்கள் மீதான வாள் வெட்டு, கைதை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் பகுதியில் இசைநிகழ்ச்சியொன்றை பார்த்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர்மீது இனந்தெரியாத குழுவினர் வாள் வெட்டு நடத்தினர்.

இதன்போது 3 மாணவர்கள் சரமாரியான வாள்வீச்சுக்கு இலக்காகினர். கலைப்பீடத்தில், இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவனின் கை துண்டாடப்பட்டதடன், அதே பீடத்தில் கற்கும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த றஜீபன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபதர்சன் ஆகியோர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகினர்.

கை துண்டிக்கப்பட்ட முரளிதரன் என்ற மாணவன் கொழும்பு வைத்தியசாலையிலும், ஜெபதர்சன், றஜீபன் ஆகிய இரு மாணவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைபெற்று வருகின்றனர். அதேபோல கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, அதிகாலை வேளையில் ஊடகவியலாளர் ஒருவருடன் சேர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அயல்வீட்டுக்காரருடன் முரண்பட்டனர் என்ற காரணத்தினாலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டன.

இவ்வாறான சம்பவங்களைக் கண்டித்தே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, வாள்வெட்டை நடத்திய இனந்தெரியாத நபர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரியிருந்தனர். அதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Posts