Ad Widget

க்ளைபோசெட்டை விட அதிக விஷமுடைய கிருமிநாசினி சந்தையில்?

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக விஷம் உடையது என, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கிருமி நாசினி ஆண் இனப் பெருக்கத் தொகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசோதனைகளின் மூலம் அறியக்கிடைத்துள்ளது எனக் கூறியுள்ள அவர், எனவே இதனை உடனடியாக சந்தையில் இருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு கொண்டுவரப்படும் எந்தவொரு விவசாய இரசாயனத்தையைும் பரிசோதனை செய்யாதமைக்கு பூச்சிக்கொல்லிகள் பதிவாளரே (Registrar of Pesticides Department) பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க, க்ளுபோசினேட் எனும் இப் புதிய கிருமி நாசினி தொடர்பில், சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அசேல இதவலவிடம் வினவியபோது, இது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து கருத்து வௌியிட்ட பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் சுமித் ஜெயக்கொடி, குறித்த கிருமிநாஷினி 1990ம் ஆண்டில் இருந்து இருப்பதாகவும், தேயிலை செடிகளுக்கு களை எடுக்கும் நடவடிக்கைகளுக்கே இதனைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

எதுஎவ்வாறு இருப்பினும் உரிய பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தினால் இது ஆபத்தானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts