Ad Widget

மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பார்களா? : வியாழேந்திரன்

இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார்.

ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு இனம் சந்தோசப்படும் நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர் கடந்த காலத்தில் தமிழர்கள் அழிக்கப்படும்போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்ததையும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா, ராவணபாலய போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதால் தான் இந்நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.

ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இனவாத, மதவாத செயற்பாடுகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. 2017 இல் ஜின்தோட்டையில், 2018 இல் அம்பாறையில் மற்றும் கண்டி என நடைபெற்ற இனவாத சம்பவங்களை நோக்கும்போது சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.

அதே வேளை முஸ்லிம் மக்களுக்குத் தலைமை தாங்குகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படும் போது இந்த நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் வன்முறைகளைத் தடுக்கும் திட்டத்தை எதிர்வரும் பாராளுமன்ற அமர்விற்குள் முன்வைக்காவிட்டால் நல்லாட்சிக்கு இவர்கள் வழங்கும் ஆதரவினையும், அமைச்சரவையில் இவர்கள் வகிக்கும் அமைச்சுப்பதவிகளையும், மக்களுக்காக தூக்கி எறிவார்களா? என இவர்களிடம் கேள்வி எழுப்புகின்றேன்.

அத்துடன் இவ்வாறான வன்முறைகளினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் காணப்படுகின்றது. கடந்த கால அரசினால் அப்பாவித்தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து , தேசியக் கொடியை பறக்கவிட்டு சந்தோசமாக கொண்டாடிய வரலாறும் உள்ளது என்பதையும் மறக்கமுடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts