Ad Widget

கோமாளித்தன அரசியலுக்காவா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன? : மணிவண்ணன் கேள்வி

இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (31.01.2018) புதன்கிழமை நல்லூர் பிரதேசத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய மணிவண்ணன்,

”நீங்கள் நம்பி வாக்களித்தவர்களே இன்று அவர்களின் கூட்டங்களில் உங்களிடம் அடையாள அட்டை கேட்கிறார்கள், உங்கள் உடல்களைப் பரிசோதனை செய்கிறார்கள். எஸ்.ரி.எப் பாதுகாப்போடு உலாவுகிறார்கள். ஆனால் மேடைகளில் ஏறியவுடன் இராணுவத்தை அகற்றவேண்டும் என முழங்குகின்றார்கள். நாங்கள் இவ்வளவு காலமும் நாம்பி நம்பி ஏமாந்து போன இந்த அரசியல் சூழல் மாற்றப்படவேண்டும். இங்கு புதியதொரு அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அரசியல்வாதிகள் மேடையில் ஏறிநின்று கவர்ச்சிகர அரசியல் வசனங்கள் பேசி மக்களை உசுப்பேற்றுவதும் மக்கள் கீழே இருந்து கைதட்டுவதும் பின்னர் வாக்களித்துவிட்டு அரசியல்செயற்பாட்டிலிருந்து ஒதுங்கிவிடுவதும்தான் காலகாலமாக நடந்துவருகின்றது. இதனைச் சாட்டாக வைத்து அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல்வரும்வரை தான்றோன்றித்தனமான மக்களின் ஆணைகளையும் விரும்பங்களையும் மீறி செயற்படுகின்றனர். பின்னர் தேர்தல் நெருங்கியவுடன் உணர்ச்சியும் கவர்ச்சிகரமும் மிக்க பேச்சுக்களோடு மக்கள் முன்வந்து நிற்கின்றனர். இந்தச் செயற்பாடு முழுமையாக மாற்றப்பட வேண்டும். மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் அரசியரல் செயற்பாட்டாளர்களாக மாறினால்தான் எமது தேசியக் கொள்கைகளையும் மக்களின் அபிலாசைகளையும் முன்கொண்டு செல்ல முடியும்.

இவற்றினை மக்கள் தவறவிட்டதனால்தான் மக்கள் போராட்டங்களை இவர்கள் கண்டுகொள்கிறார்களில்லை. இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டாம் ஒருவருடமாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றினைக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால்தான் அண்மையில் வவுனியாவில் நடந்த போராட்டம் ஒன்றில் அவர்களின் படங்களை வைத்து மண் அள்ளிப் போட்டு மக்கள் சாபமிட்டனர். அவர்களைத் துரோகிகள் என்றனர்.
ஆனால் தமிழ்த் தேசியப் பேரவையைப் பொறுத்தவரை இது மக்கள் இயக்கமாகவே இருக்கிறது இனியும் இருக்கும். இதனால்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கியிருக்கின்றது.

எங்களை ஏமாற்றிக்கொண்டு அரசியல் நடத்துகின்ற ஒரு நிலைமை இங்கு இருக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியும் கடந்த 30 வருடங்களாக இங்கு ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. இங்கு இவர்கள் கோமாளி அரசியல் நடத்துவதற்கு அவர்கள் தங்கள் இரத்தத்தையும் சதையையும் ஆகுதியாக்கவில்லை. இவ்வளவு சொத்துக்களை இழக்கவில்லை. இவை அனைத்தும் ஒரு இலட்சியத்துக்காக தியாகம் செய்யப்பட்டது.

இந்த இலட்சியத்தை நாங்கள் முன்னுக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்றால் நீங்கள் இதுவரை ஆதரித்துவந்த தரப்பினைப் போல கோமாளித்தனமான அரசியல் செய்யக்கூடாது. பதவி வெறி பிடித்த அரசியல் செய்யக்கூடாது. இதுவரை காலமும் தமிழ்மக்கள் ஆதரித்துவந்த ஒரு தரப்பு இன்று தேர்தல் தொடங்க முதலே என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். பதவி வெறிகொண்டு சீற்றுக்களுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் வசைபாடிக்கொண்டதும்தான் நடந்தது. இவர்கள் கடந்த உள்ளூராட்சி சபைகளை ஆட்சிசெய்தபோது என்ன செய்தார்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். தங்களது உறுபினர்களை தாங்களே தாக்கினார்கள். தங்கள் தவிசாளர்கள் மீது ஈபிடிபியுடன் இணைந்து தாங்களே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். இப்படியான ஒரு நிலையையா மீண்டும் உருவாக்கப்போகின்றோம் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்” – என்றார்.

Related Posts