Ad Widget

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாணசபையின் 24 ஆவது சபை அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கோமகனின் விடுதலைக்கான மக்கள் அணியினால் மேற்கொள்ளப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கான மகஜர் ஒன்றினையும் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் கற்குளம் கொட்டடியைச் சேர்ந்த முருகையா கோமகன் 2009ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சியின் ஊடாக போட்டியிட்டு வெற்றியீட்டி மாநகர சபை உறுப்பினரானார்.

அதனையடுத்து கடந்த 2010 .08.23ஆம் திகதி யாழில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு எவ்விதமான அடிப்படை குற்றச்சாட்டுக்களும் இன்றி கடந்த 5 வருட காலமாக கொழும்பு பெரிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதியின் கீழ் கொழும்பு மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தப்பட்டு வருகின்றது.

எனவே கோமகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்தை வேண்டி தங்களுக்கு வாக்களித்த எமது சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 320 மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும் கோரப்பட்டுள்ளது.

Related Posts