Ad Widget

கோப்பாயில் இந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை சுத்தம் செய்யும் படையினர்!!

கோப்பாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி ஒருவரின் சமாதியை புனரமைக்க 50 க்கும் மேற்பட்ட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கல்லறை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கல்லறையின் புனரமைப்பு பணிகளை முன்னிட்டு அங்கு இராணுவ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் கோப்பாய் தெற்கு இராஜவீதியில் உள்ள வெள்ள வாய்கால் பிராயடி பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவர் அந்த கால பகுதியில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலிகளுடனான மோதலின் போது உயிரழந்துள்ளார்.

அப்போது குறித்த பகுதியில் அவரின் நினைவாக சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் அந்த சமாதி தற்போது வரை கவனிப்பாரற்று இருந்துள்ளது.

இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த சமாதி கல்லறையை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் இறங்கியுள்ளது.

குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லாதவாரும், குறிப்பாக ஊடகங்கவியலாளர்களுக்கும் அங்கு செல்லவும், புகைபடம் எடுப்பதற்கும் இராணுவம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts