Ad Widget

கோத்தாபய கொலை முயற்சி – 13 ஆண்டுகளுக்கு மேல் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுவிப்பு

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றையதினம் விடுதலை செய்தது.

2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்களிலில் வந்த ஒருவரால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கோத்தாபய ராஜபக்ச காயங்களின்றி உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் நால்வர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களில் அச்சகர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

நான்காம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த சந்திரபோஸ் செல்வச்சந்திரன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபர் முன்வைத்திருந்தார். எனினும் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் பொலிஸ் சாட்சியங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்து கட்டளையிடப்பட்டது.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்வச்சந்திரன் 14 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க உரிய சாட்சியங்களை முன்வைக்காமல் சட்ட மா அதிபர் தொடர்ந்து தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடந்த தவணையின் போது மன்றுரைத்திருந்தார்.

அதனடிப்படையில் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கக் கூடிய சாட்சியங்களை ஒழுங்குபடுத்த சட்ட மா அதிபருக்கு நேற்று (டிசெ.18) வரை கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளையில் சட்ட மா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டவாதி, சட்ட மா அதிபர் வழக்கை தொடர்ந்து நடாத்த சான்றுகள் உண்டா என்பதை தீர்மானிக்க மேலும் கால அவகாசம் கோரினார்.

எனினும் அதற்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, வழக்கை தொடர்ந்து நடத்த சட்ட மா அதிபர் சான்றுகளை நீதிமன்றில் முன்வைக்கப்படாவிடின் எதிரியை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய சட்டரீதியான அதிகாரம் நீதிமன்றுக்கு உண்டு என மன்றுரைத்தார்.

எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம், சந்திரபோஸ் செல்வச்சந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து விடுதலை செய்தது.

Related Posts