Ad Widget

கோணேஸ்வரம் கட்டுமானங்களுக்குத் தடை: கோவில் பரிபாலன சபை விளக்கம்

தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் சகல கட்டுமானங்களையும் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்கு தொல்பொருளியல் திணைக்களம் பணித்துள்ளதாக கடந்த 18ஆம் திகதி செய்தி வெளியானது. இது தொடர்பில், கோவிலின் பரிபாலன சபை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள், 18.12.2015ஆம் திகதியன்று வெளியாகின.

இந்நிலையில், கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை, ஊடகங்கள் வாயிலாகச் சமர்ப்பிக்கிறோம்.

தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள், ஓவ்வொரு முறையும் வந்து பார்த்து விட்டு, வேலையை நிறுத்தச் சொல்வார்கள். கட்டடப் பொருட்களைக் கோட்டைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று, இராணுவத்தினருக்கு அறிவிப்பார்கள். இப்படியே கடுமையான கெடுபிடிகள் தொடர்ந்த போதும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, சமாளித்து வேலைகளைச் செய்தோம்.

22 வருடங்களாக இடம்பெறாதிருந்த மகா கும்பாபிஷேகத்தை நிறைவேற்ற வேண்டுமானால், கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திருப்பணி வேலைகள் செய்தாக வேண்டும். மகா கும்பாபிஷேகத்தினை 11.02.2015ஆம் திகதியன்று, நல்ல முறையில் நிறைவேற்றினோம்.

கடந்த 4.12.2015ஆம் திகதி, வெளிவீதிக்குத் தேவையான கொங்கிறீட் தூண்களை அமைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தொல்பொருள் துறையினர் வந்து, அவ்வேலைகளை உடனே நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

பத்திரிகைகளில் காணப்பட்ட சில தவறான செய்திகள் சார்ந்த உண்மைத்தன்மைகளை விளக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது:

‘4 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்று, மிகவும் இரகசியமான முறையில் கட்டப்படுகிறது’ எனவும் அச்செய்தி கூறகிறது.

வெளிவீதிக்கான தளம் அமைப்பதற்குரிய தூண்கள் நிறுவ, கொங்கிறீட் போட்டதைத் தவிர வேறு எந்த வேலையும், அங்கு நடைபெறவில்லை என்பதே உண்மை.

நாம் பொறுப்பேற்கும் முன்னரே, முன்னைய நிர்வாகக்; காலத்தில், கோயில் கடை அமைந்திருக்கும் இடத்துக்கு எதிரில் உள்ள நிலத்தில், சங்கரி கோயில் கட்டுவதற்காக அத்திவாரமிடப்பட்டதை எல்லோரும் அறிவீர்கள்.

ஆலயத்தின் வளாகத்தில் புதிதாக முளைக்கப்பட்ட கடைகள் தொடர்பில், நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுவிட்டது என பரவலாகப் பேசப்பட்ட பின்னர், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மீள்குடியேற்றம் புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சருக்கும் அவ்வமைச்சின் செயலாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கும் இதுபற்றி விளக்கமாக எழுதியிருந்தோம்.

புதிது புதிதாகக் கடைகள் முளைத்தன. இராணுவத்திடமும் பொலிஸாரிடமும் கூறியும் பயனில்லை. காலப்போக்கில் இவை பல்கிப் பெருகி, அன்னதான மடத்தையும் தாண்டி கிளிப் கொட்டேஜ் சந்தி வரை அண்மித்து விட்டன. முற்றாக இவைகளை அகற்றி, அவர்களது வாழ்வாதாரத்துக்குத் தடை போடும்படி நாம் கோரவில்லை. மாறாக, ஆலய சூழலின் புனிதம் கருதி, கிளிப் கொட்டேஜ்க்கு அப்பால், அவர்களுக்கான கடைகளை அமைத்துக் கொடுக்கலாம் என்றே கூறினோம்.

சமீபத்தைய நிகழ்வுகளைப் பார்த்தால், அவர்களுக்கே அவ்விடங்களைச் சொந்தமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது போலத் தோன்றுகிறது.

இந்நிலையில், தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலை எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான், தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் எதிர்பார்ப்பா?

நல்லாட்சி நடைபெறுகிறது என பெருமிதப்படுத்தப்படும் இக்கால கட்டத்தில், அரசு முன்வைக்கும் சமூக, சமய, இன நல்லிணக்கத்துக்கு, தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஒத்துழைப்புக் கொடுப்பார்களா? எங்களாலான அத்தனை முயற்சிகளை எடுத்தும், எதுவும் சித்திக்காத பட்சத்தில், எங்கள் வலிகளை யாரிடம் சொல்லி நியாயம் கேட்க முடியும்?’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts