Ad Widget

கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிஐடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு பொலிஸாரால் (சிஐடி) விசாரிக்கப்பட்டுள்ளார்.

Koththapaya-raja

யுத்த காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காலி துறைமுகத்தில் தடுத்து சோதனையிடப்பட்ட மிதக்கும் ஆயுதக்கிடங்கு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு குறித்து சிஐடி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்த வீட்டுக்கு சென்ற இரண்டு சிஐடி அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலத்தை பெற்றதாக காவல்துறை கூறுகிறது.

அவ்வாறே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டாரா என்பதை இப்போதே கூற முடியாது என்றும் காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

‘கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு பகுதி வாக்குமூலத்தை மட்டுமே தந்தார். பின்னர் அவர், பொருத்தமான ஆவணங்களுடன் ஒரு முழுமையான வாக்குமூலத்தை தன்னால் அளிக்கமுடியும் என்று கூறினார்’ அஜித் ரோஹண.

‘எனவே இந்த வாக்குமூலம் பெறும் முயற்சியை அதிகாரபூர்வமாக நாங்கள் இடையில் முறித்துக்கொண்டு, இந்த விஷயம் குறித்த அனைத்து ஆவணங்களையும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் அவரிடம் வாக்குமூலம் பெற செல்வோம்’ என்றும் கூறினார் காவல்துறை பேச்சாளர்.

இந்த விடயம் தொடர்பாக அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரிடமும் ரட்ண லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதக் கிடங்குகளில் இருந்து, டி-56, எஸ்எல்ஆர், எம்பிஎன்ஜி, இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஷாட்கன்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

Related Posts