Ad Widget

கொழும்பு றோட்டறிக் கழகத்தால் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் கையளிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சிகிச்சைப் பிரிவுக்கு கொழும்பு றோட்டறிக் கழகத்தினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

co rotary 654

இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கேட்போர் கூடத்தில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

றோட்டறிக் கழகத்தினால் போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவுக்கு ஏற்கனவே இரு கட்டங்களாக உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இன்று மூன்றாவது கட்டமாக இந்த உதவி வழங்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் காலங்களில் கண் தொடர்பிலான அனைத்து சிகிச்சைகளையும் போதனா வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பவானந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில்

கொழும்பு றோட்டறிக் கழகத்தினர் யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

இவர்களது உதவிகள் மூன்று கட்டங்களாக எமக்கு கிடைக்கப்பட்டது. இன்று மூன்றாவது கட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இதன் மூலம் போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவானது நாட்டின் ஏனைய கண்ணியல் சிகிச்சைப் பிரிவுகளுள்ள வைத்தியசாலைகளை விட மிகவும் திறமையான வசதிகள்கொண்டதாக அமைந்துள்ளது.

கண்ணியல் பிரிவுக்குரிய அனைத்து சிகிச்சை உபகரணங்களும் தற்போது போதனா வைத்தியசாலைக்கு கிடைத்துவிட்டது. இதனையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் கொழும்பு றோட்டறிக் கழகத்திற்கும் யாழ். றோட்டறிக் கழகத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்வரும் காலங்களில் கண் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு என இங்கு வருபவர்களுக்கு இங்கேயே சிகிச்சை வழங்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னரைப் போல கொழும்பு, கண்டி என்று நோயாளர்கள் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts