Ad Widget

கொழும்பில் அனந்தியைப் பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள்! – சுரேஷ் எம்.பி

வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புலனாய்வாளர்கள் நேற்று முன்தினம் பின்தொடர்ந்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 8 ஆம் ஆண்டு நினைவுப் பேருரைக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மக்கள் தொடர்பாக சில விடயங்களைப் பேசுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சுவிஸ் தூதரகத்திற்கு சென்று வரும்போது அவரைப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்தனர்.

இதனால் அவர் கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள கோவிலினுள் சென்று அதன் பின்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைத் தொடர்பு கொண்டு அவருடைய வழிகாட்டலின் துணையுடன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் ரவிராஜின் நினைவு விழாவுக்கு வருகை தந்தார்.

புலனாய்வுப் பிரிவு என்பது இன்னமும் யாரையும் விட்டு வைக்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மக்களுடைய பிரச்சினை தொடர்பில் பேசுபவர்கள் உட்பட ஒவ்வொருவரினதும் நடவடிக்கையும் அவர்களால் கண்காணிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றது என்று மஹிந்த அரசு கூறுகின்றமை அர்த்தமற்றது” – என்றார்.

Related Posts