யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் கடந்த 20ம் திகதி அதிகாலை வேளையில் குறுகிய நேரத்திற்கள் ஏழு வீடுகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதானது, குடாநாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலையை மீண்டும் உருவாக்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கோப்பாய் பகுதியில் நடந்துள்ள இச் சம்பவங்களின்போது சுமார் 50பவுன் தங்க நகைகள், சுமார் 25 இலட்சம் ரூபா பணம் என்பன
கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் தினசரி சம்பவங்களைப் போல் தொடர்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறான சம்பவங்கள் குடாநாட்டின் சட்டம் மற்றும் ஒழங்கு தொடர்பில் மீண்டும் மீள் பரிசீலனை
செய்ய வேண்டிய நிலையைத் தோற்றுவித்துள்ளது.
எனவே, இச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகும். அதே நேரம் கிராம சேவையாளர்கள் பிரிவுகள் மட்டத்தில் தகுதியான நபர்களைக் கொண்ட பொது மக்கள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இவ் விடயம் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகலரத்னாயக்கவின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.