Ad Widget

கொலை செய்வது எப்படி? என பத்திரிகைகள் கற்பிக்கின்றன

படுகொலைகளை எவ்வாறு செய்வது, குற்றச்செயல்களை எவ்வாறு புரிவது என்பதை விளக்கமாகச் சொல்லிக்கொடுக்கும் பத்திரிகையொன்றை அரசாங்கம் அச்சிட்டு வருகின்றது. குற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிப்பதன் மூலம், மேலும் பல குற்றங்கள் செய்ய வழிசமைத்துக்கொடுக்கப்படுகின்றன என்று பிரபல திரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்தார்.

‘வித்தியாவின் பின்னர் நாம்?’ என்ற தொனிப்பொருளில், கொழும்பு, பொரளை நகரோதய மண்டபத்தில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான சம்பவங்களை பிரசுரித்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாடிய அவர், ‘இந்தியாவில் யுவதியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த யுவதியின் பெயரோ அல்லது புகைப்படமோ எந்தவொரு பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படவில்லை. அந்தளவுக்கு அந்த நாட்டின் ஊடகங்கள் தங்களுக்குள் தணிக்கையொன்றைப் பேணி வந்தன. ஆனால், இலங்கையின் நிலைமை அதை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது’ என்றார்.

நாலக்க குணவர்தன, சட்டத்தரணி கே.டபிள்யூ.ஜனரஞ்ஜன, சந்தன சிறிமல்வத்த, பேராசிரியர் ஹரினி அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வை, இளம் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் சந்தன சிறிமல்வத்த கூறுகையில், ‘வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது, ‘கற்பழிப்பு’ என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்தாமலிருக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

சில இலத்திரனியல் ஊடகங்கள், தங்களது செய்தியறிக்கையை தொலைக்காட்சி நாடகம் போன்று வெளியிட்டு, குற்றச்செயல்களுக்கான தூண்டுதல்களையும் வழிமுறைகளையும் சொல்லி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts