Ad Widget

‘கொலையாளிகளின் பணம் வேண்டாம்’ : வித்தியாவின் தாயார்

எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று, இவ்வாண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறையில், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் பூர்த்தியடைந்த நிலையில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனைத் தீர்பளித்தும் குற்றவாளிகள், தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் 70 இலட்சம் ரூபாய் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

“வித்தியாவைக் கொலை செய்தவர்களும் வித்தியாவின் உடல் வீட்டுக்கு கொண்டு வரும் முன்னரும் வந்திருந்தார்கள். இவர்கள் தான் கொலையாளிகள் என நாங்கள் நினைக்கவில்லை. இவர்கள் மகள் வளர்த்த ஆடு முன் சென்ற போது, ஆடும் அவர்களை முட்டியது.

வித்தியாவின் அண்ணாவிடம் கொலையாளிகள் ஆறுதல் கூறினார்கள். சுவிஸ்குமார் என்பவரை எங்களுக்குத் தெரியாது மரணச் சடங்கில் அவரும் வந்திருந்தார்.

வித்தியா உயிரிழந்த நாள் முதல் இன்றுவரை அவளின் அப்பா வாய் பேச முடியாத நிலையில் உள்ளார். ஊர்காவற்துறைப் பொலிஸார் இதனை முறையாக விசாரணை செய்யவில்லை. மக்களின் ஆர்ப்பாட்டத்தாலேயே இந்த வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீதி நிலைநாட்டப்பட்டமைக்காக, மூன்று நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். நல்ல தீர்ப்பு அளித்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளாக சிரமப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

மகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். குற்றப்புலனாய்வுப் பிரிவில் 15 பேர் மிகவும் சிரமப்பட்டார்கள். பொலிஸார் அசமந்தமாக இருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மிகச் சிரமத்துடன் செயற்பட்டனர்.

எனது மகளைக் கொலை செய்த கொலையாளிகளிடம் இருந்து ஒரு சதம் கூட வேண்டாம். ஏனென்றால், எனது மகள் எனக்கு மீண்டும் கிடைக்கமாட்டாள்.

எனக்கு நடந்தது போன்று வேறொரு தாய்க்கும் நடக்கக்கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கின்றேன். நான் படும் துன்பம் வேறொரு தாய்க்கும் கிடைக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

Related Posts