Ad Widget

கொலைகள் கொள்ளைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: சிறிரெலோ

sri_telo1யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக தொடரும் கொள்ளைகள் மற்றும் கொலைச்சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் இந்தச் சம்பவங்களினால் குடாநாட்டு மக்களை மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்’ என சிறீரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிப்பதாகவது,

‘கடந்த காலங்களில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற கொலைகள், கொள்ளைகளின் பின்னணியில் புலிகள் இருப்பதாக கூறிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் தற்போது யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கொலைகள் கொள்ளைகள் மற்றும் குற்றச்செயல்களின் பின்னனியில் யார் இருப்பதாக கூறப்போகின்றனர்? என கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

‘கடந்த 30 வருட கால கொடூர யுத்தத்திற்குள் சிக்குண்டு துன்பப்பட்டு, உறவுகளை இழந்து நாதியற்று இருந்த எம் மக்கள், ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்ற இக்காலகட்டத்தில் ‘பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல’ மீண்டும் எம்மக்கள் மீது சமூகவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேண்டப்படாத செயற்பாடுகள் மக்களிற்கு பேரிடியாக இருக்கின்றது.

எமது இனத்தின் கலை, கலாசாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றினை அடியோடு அழிப்பதற்கும் தமிழ் இனத்தின் இருப்பிற்கான சுவடுகளை இல்லாது ஒழிப்பதற்கும் ஒரு சில புல்லுருவிகள் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்குரியதே.

கொள்ளை, கொலை இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தினையும் யாழ். குடாநாட்டு மக்களிடையே திணிப்பதற்கு எமது சமூகத்திலுள்ள சில சமூகவிரோதிகள் தலைதூக்கியிருப்பது அவமானத்திற்குரியதாகும்.

தென்னிலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது, உடனடியாக களத்தில் இறங்கி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குடாநாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களை கண்டுங்காணாமலும் இருப்பது மக்களிற்கு கவலையை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் எமது சமூகத்திலுள்ள சில சமூகவிரோதிகள் இணைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானவர்கள் திருந்தி வாழும்படியும், நாதியற்று இருக்கின்ற எமது சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் இருப்பதனாலும் அதனை உணர்ந்து செயற்படும் படியும் தமிழ்மக்களின் நலன் பேணும் கட்சி என்றவகையில் சிறீரெலோ கட்சி சார்பாக வேண்டுகோளினை விடுக்கின்றேன்.

தென்னிலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் எவ்வாறு செயற்படுகின்றார்களோ, அதேபோல் வடக்கு – கிழக்கிலும் பாகுபாடுகளின்றி செயற்படவேண்டும்.

குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான சம்பவங்களை இல்லாதொழிக்கவும் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Posts