Ad Widget

கொரோனாவின் 5 ஆவது அலையை தவிர்க்க வேண்டும் : அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஐந்தாவது அலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

எனவே வீடுகளிலேயே தொற்றை இனங்காண்பதற்கான எளிமையான பரிசோதனை முறைமையை அறிமுகப்படுத்தல் , எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல், வினைத்திறனான தடுப்பூசி வழங்கல், மூன்றாம் கட்ட தடுப்பூசி, பிறழ்வுகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் அவதானம் செலுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது கொவிட் தொற்று பரவல் மற்றும் மரணங்களின் எண்ணக்கை குறைவடைந்துள்ள போதிலும், இனிவரும் காலங்களில் ஐந்தாவது அலை ஏற்படாமல் தடுப்பதே பிரதானமானதாகும்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விடயங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது மீண்டுமொரு அலை உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ஐந்தாவது அலை ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய 6 விடயங்களில் பிரதானமானது வினைத்திறனாக தடுப்பூசி வழங்களை முன்னெடுப்பதாகும்.

ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டால் நவம்பர் மாதமளவில் முழு சனத்தொகையில் 73 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றிருப்பர். இவ்வாறு சகலரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அடுத்த அலையை தடுக்கக்கூடிய பிரதான காரணியாக அமையும்.

எவ்வாறிருப்பினும் இரு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட் வைரஸ் தொற்றக்கூடிய அபாயம் காணப்படுவதால் மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்த வேண்டும்.

இதன்போது நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.

மிகப் பிரதானமானது வீடுகளிலேயே எளிதாக தொற்றை இனங்காணக் கூடிய கொவிட் பரிசோதனை முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். பிரித்தானியா போன்ற நாடுகள் தற்போது இந்த முறைமையைப் பின்பற்றுகின்றன.

அத்தோடு எழுமாற்று பரிசோதனைகளின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். எழுமாற்று பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்படும் போது அபாயமுடைய பகுதிகளை இனங்காண முடியும் என்பதோடு , உப கொத்தணிகள் அல்லது கிளை கொத்தணிகள் பிரதான கொத்தணிகளாக பரவுவதையும் தடுக்க முடியும்.

இதேபோன்று புதிய திரிபுகள் அல்லது பிறழ்வுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும். தற்போது நாட்டில் சுமார் 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே இந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதனை தொடச்சியாக செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றை செய்வதன் ஊடாக ஐந்தாவது அலையை தடுக்க முடியும். இனியும் நாட்டை முக்கி வைத்திருக்க முடியாது என்பதால் ஐந்தாவது அலையை தடுக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Related Posts