Ad Widget

கொட்டியாங்காட்டில் உயிரிழந்தவர் மாரடைப்பினாலே உயிரிழந்துள்ளார். மருத்துவ அறிக்கை

dead-footஇறுதி சடங்கு செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சடலம் மாரடைப்பினால் உயிர் பிரிந்த சடலமே என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியதிகாரி க.இரத்தினசிங்கம் தெரிவித்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தொண்டமனாறு கொட்டியாங்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த துரைராசா சின்னராசா (வயது 55) என்பவர் திங்கட்கிழமை (21) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயர்குருதி அமுக்கம் அவருக்கு இருந்த காரணத்தினால், அதனாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் நினைத்து வைத்தியசாலைக்கு சடலத்தினைக் கொண்டு செல்லாமல், அவருடைய இறுதிச் சடங்குக் கிரியைகளை திங்கட்கிழமை (21) அவரது வீட்டில் நடத்தியுள்ளனர்.

இதன்போது, சடலத்தினைக் குளிப்பாட்டுகையில் சடலத்தின் முதுகில் காயங்கள் இருந்ததுடன், மர்ம உறுப்பு றப்பர் நூலினால் கட்டப்பட்டு இருந்தமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, சந்தேகம் கொண்ட உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து, பருத்தித்துறை நீதவானுடன் வருகை தந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதவானின் உத்தரவிற்கமைய சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.

பிரேத பரிசோதனையின்போது அவர் மாரடைப்பினால் உயிரிழந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நபர் போதைப் பொருள் பாவனை செய்து பின்னர் அதனை கைவிட்டிருந்தமையினால், அவர் இறந்தவுடன் முதுகில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்தியதிகாரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் பல வருடங்களாக ஜேர்மனியில் வசித்தவர் என்பதனால் அங்குள்ள கலாசார நடைமுறைக்கமைய அவருடைய மர்ம உறுப்பை இறப்பர் நூலினால் கட்டியிருந்ததாக அவரது மனைவி புனிதவதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துச் சடலத்தினை மனைவி, பிள்ளைகளிடம் ஒப்படைத்ததுடன், இறுதிச் சடங்கினை நடத்தும்படி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

இறுதிச் சடங்கு செய்யப்பட்ட சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Related Posts