Ad Widget

கொக்குவில் பகுதியில் துரத்தித் துரத்தி வாள் வெட்டு

நீதிபதி இளஞ்செழியன் யாழில் வாள்வெட்டுக் கலாசாரத்தில் ஈடுபடும் ரவுடிகளை அடக்குமாறு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இத் துணீகர வாள்வெட்டுச் சம்பவத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப் பகுதியில் இரவு 7 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

வாள்வெட்டு நடத்தியவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிலில் தப்பி வந்த இளைஞர் அதிக இரத்த போக்கு காரணமாக கொக்குவில் சந்திப் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்களால் வாள்வெட்டுக்கு இலக்கானவர் மீட்கப்பட்டு ஆட்டோ ஒன்றின் உதவியுடன் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சுமார் 8.30 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அங்கு பொலிஸார் நடத்திய விசாரணையில் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியினைச் சேர்ந்த விதுஷன் (வயது 20) என்பவரே காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அதிலும் பெரும்பாலும் சுன்னாகமும் அதனை அண்மித்த பகுதிகளிலும் நடைபெறும் வாள்வெட்டுக் கலாசாரத்தினை தடுத்து குற்றவாளிகளை கைது செய்து பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படைக்கு உத்தரவிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts