Ad Widget

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வாள் வெட்டு குழுவை அழைத்து வந்த மாணவன்!! விரிவுரையாளர்கள் மூவர் காயம்!!

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வன்முறைக்கு காரணமான மாணவன் தப்பித்த நிலையில் அவரால் அழைத்துவரப்பட்ட 6 பேரில் ஒருவர் மாணவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

“யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளியில் சென்று 6 பேரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் கத்தி ஒன்றுடனும் வாள் ஒன்றுடனும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் மாணவர்கள் இடையே மோதல் இடம்பெறவில்லை. வந்தவர்களில் ஒருவர் விரிவுரையாளர்களுக்கு தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். அத்துடன், அங்கு மின்குமிழ் ஒன்று தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களால் ஒப்படைக்கப்பட்டவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்னுடன் வந்தவர்களின் பெயர் விவரங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பக் கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது.

Related Posts