Ad Widget

தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.

யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத் தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கொழும்பில் இருந்த வந்த நீரியவளத் திணைக்கள அதிகாரிகள், தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்தே அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப்பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்து சரியான இடத்தை கொடுத்ததாக தமிழ் மீனவர்கள் கூறியுள்ள நிலையில், இன்றைய தினம் அளவீடு செய்யும் போது, சிங்கள தமிழ் மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts