Ad Widget

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுங்கள் – காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்

ஏனைய மனிதப்புதைகுழி விவகாரங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மெத்தனப்போக்கை விடுத்து, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் செவ்வாய்க்கிழமை (5) மீண்டும் ஆரம்பமாகின்றன.

சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி அகழ்வுகளை சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளவேண்டும் என்றும் வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் பின்னணியிலேயே இன்று இந்த அகழ்வுப்பணிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 20 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் இருப்பதாகவும், இருப்பினும் இவை தொடர்பான விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் நால்வரால் எழுதப்பட்ட கடிதத்துக்கு சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காமல் இருப்பது, இவ்விடயத்தில் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கையே வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திலேனும் சர்வதேசத்தின் அனுசரணையைப்பெற்று, உரிய நியமங்களுக்கு அமைவாக அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுமாறும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் சார்பில் பிரிட்டோ பெர்னாண்டோ அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts