Ad Widget

கையொப்ப முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு யாழ்.பல்கலையின் விஞ்ஞான ஆசிரியர் சங்கம் விளக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமானது பல்கலைக்கழக கல்விசார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பெறப்பட்ட தங்கள் கையொப்பங்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. என்ற குற்றச்சாட்டு தொடர்பான விளக்கமொன்றிற்கான ஊடக சந்திப்பினை இன்று யாழ். பல்கலைககழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் நடாத்தியிருந்தது.

இச் சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கணித புள்ளிவிபரவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சே.அறிவழகன் நிர்வாக உறுப்பினர் இரசாயனவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் நா.சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமானது பல்கலைக்கழக கல்விசார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டிற்கு பெறப்பட்ட தங்கள் கையொப்பங்களை முறைகேடுகள் தொடர்பான விசாரணை மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்க கோரும் ஆவணத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என 18 ஆசிரியர்கள் பல்கலைக்கழகப் பேரவைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 05.05.2015 திகதியிடப்பட்ட கடிதங்களை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரான இராசகுமாரனும் மற்றும் சிலரும் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு 06.05.2015 அன்று நேரடியாக வழங்கினர். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியும் இருந்தனர்.

இதுவே இவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டு தொடர்பாக நாம் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக எமது தொழிற்சங்கம் 2011 ஆம் ஆண்டிலிருந்து பல முறைப்பாடுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில அறிக்கைகள் பல்கலைக்கழகத்தின் எல்லா சமூக உறுப்பினர்களிடையேயும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளன.

மேற்படி எமது முறைப்பாடுகளுக்கு முன்னைய அரசின் கீழிருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்தோ, யாழ். பல்கலைக்கழக பேரவையிடமிருந்தோ எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

புதிய அரசு பதவியேற்று புதிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அமைக்கப்பட்டதும் எம்மால் அனுப்பப்பட்ட அனைத்து அறிக்கைகளும் (அவற்றில் சில பல்கலைக்கழக சமூகத்தவர் பலரது கையொப்பங்கள் பெறப்பட்டவை) ஒன்றாகத் தொகுக்கப்பட்டது. அந்த தொகுப்பின் முகவுரையில் நாம் எம்மால் 2011 ஆம் ஆண்டிலிருந்து சுமத்தப்படும் மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையை வேண்டி அவ் விசாரணைக்கு ஏதுவாக பல்கலைக்கழகத்திற்கு ஒரு தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்குமாறு கோரியிருந்தோம்.

இக்கோரிக்கைக் கடிதத்தில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்க தலைவரினதும் செயலாளரினதும் கையொப்பங்கள் மட்டுமே உள்ளன.

2013ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி 86 பேரின் கையெழுத்துடன் எம்மால் துணைவேந்தர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு அனுப்பப்பட்ட ஆவணமும் மேற்படி தொகுப்பில் அதன் முழுவடிவில் ஒரு சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பின்வரும் முக்கிய விடயங்களை நாங்கள் எடுத்துரைக்க விரும்புகின்றோம்.

1.86 பேரிடமும் எமது தொழிற்சங்க கடிதத்தலைப்பில் பெறப்பட்ட கையொப்பங்கள் எந்த இடத்திலும் வேறு ஆவணத்திற்குரிய கையொப்பங்களாக காட்டப்படவில்லை.
2.மேற்படி ஆவணம் எவ்வித மாற்றமுமின்றி எமது தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
3.மேற்படி ஆவணத்தில் கையொப்பமிட்ட 86 பேரும் தகுதிவாய்ந்த அதிகாரியைக் கோருவதாக நாம் எவ் இடத்திலும் குறிப்பிடவில்லை.

எம்மிடம் இவை தொடர்பான சகல ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. தேவையானவர்கள் வந்து பார்வையிடலாம்.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் தனது அங்கத்தவர்களது உரிமைகளுக்காகவும் பல்கலைக்கழகத்தினது நன்மைக்காவும் குரல் கொடுத்து வரும் ஒரு தொழிற்சங்கம் ஆகும்.

எந்த சலுகைகளுக்காகவும் எமது தொழிற்சங்கம் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்தியது இல்லை.

எமது சங்கத்தை இழிவுபடுத்தும் வகையில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகள் தொடர்பில் பல்கலைக்கழகத்தில் உள்ளக விசாரணையைக் கோருவதுடன் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். என இன்றைய ஊடக சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நியமனத்தில் தகுதி புறக்கணிக்கப்படுவது பாரதூரமான பிரச்சினை : சிவபாலன்

பல்கலைக்கழக விரிவுரையாளர் நியமனத்தில் தகுதி புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத பாரதூரமான பிரச்சினையாகும் என்று, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரும் இரசாயனவியல் சிரேஸ்ட விரிவுரையாளருமாகிய நா.சிவபாலன் தெரிவித்தார்.

அரிசியில் கலப்படம் செய்யப்படுகின்றது பருப்பில் கலப்படம் செய்யப்படுகின்றது. ஆனால் மருந்தில் கலப்படம் செய்தால் அது ஒருவரது உயிரினையே பறித்துவிடும். அது போல தான் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகிய உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்கும் போது நியமிக்கப்படுபவரது தகுதிகள் உயர்ந்தளவில் இருக்க வேண்டும்.

ஏனெனில் சமூகத்திலும் சரி மாணவர்களாயினும் சரி எந்த விதமான சந்தேகங்களின் போதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களதும் பல்கலைக்கழக ஆய்வாளர்களதும் கருத்தினையே எற்றுக்கொள்கிறார்கள்.

எனவே தான் நாம் இத்தகைய பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்க கோருகின்றோம். என அவர் தெரிவித்தார்.

Related Posts