Ad Widget

கைது செய்யப்பட்ட ஆவா குழுவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், விசாரணைகளின் பின்னர் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை, கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து, யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்தது.

இதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வவுனியாவில் விடுதியொன்றில் தலைமறைவாகியிருந்த கொக்குவில், கோண்டாவில் மற்றும் நல்லூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்தோடு 6 வாள்கள், 2 கைக்கோடாரிகள் மற்றும் வெடிகுண்டு ஒன்று என்பவற்றை கைப்பற்றினர். மேலும், பொலிஸ் தடுப்பில் விசாரணையில் உள்ள வவுனியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் நாளையே நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts