Ad Widget

கைதான முன்னாள் போராளிக்கு சித்திரவதை

இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி விவேதனி சபேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஸ்வரன் மீது குற்றம்சாட்டியே சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், நேற்றயதினம் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய அவர் தொடர்பில் ரி.ஐ.டி யினர் முன்வைத்த கருத்துக்களை விசாரித்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று சபேஸ்வரனிடம் பயிற்சி பெற்ற ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரங்கள் இருக்கின்றதா என்று கடந்த 10 ஆம் திகதி கொழும்பு நீதவான் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கோரியதனையடுத்து நீதவான் நேற்று வரை விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் தமக்கு கால அவகாசம் வழங்கு மாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் இவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related Posts