Ad Widget

கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; த.தே.கூ பொலிஸாரிடம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

பொலிஸாருடைய இந்த நடவடிக்கை ஆனது மாணவர் சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலேயே அமைகின்றது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் என்ன கிரிமினல் குற்றமா செய்தார்கள்? அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டமையானது கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.

அத்துடன் மாணவர்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நாம் இராணுவ ஆதிக்கத்தை முற்று முழுதாக வெறுக்கிறோம். அதன்படி யாழில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.

எனினும் சிவில் பாதுகாப்புக் குழு என்ற வகையில் இதுவரை மக்கள் மத்தியில் பொலிஸாரில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் பல்கலைக்கழக சம்பவத்தினை அடுத்து அந்த நம்பிக்கை முற்றாக இல்லாது போய்விட்டது.

எனவே சிவில் குழுவான பொலிஸார் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பக்கச் சார்பின்றி நடந்து கொள்ள வேண்டும்.

பல்கலை மாணவர்கள் அமைதி வழியிலேயே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அந்த இடத்தில் இவர்களது பிரசன்னமானது அவசியமற்ற ஒன்றானவே உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts