Ad Widget

கைதான இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளனவா என ஆராய உத்தரவு!

சில நாள்களுக்கு முன்னர் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தை மற்றும் ஹவ்லொக் வீதி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிலரைக் பொலிஸார் சில நாட்களுக்கு முன்பாகக் கைதுசெய்தனர்.

இந்த நபர்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவர்களின் உடம்பிலிருந்து சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் ஏதாவது நீக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறிய பொலிஸார் இது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேகநபர்களின் உடம்பில் உறுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் உத்தரவொன்றை பிறப்பித்தார்.

விசாரணைகள் இன்னும் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் சந்தேக நபர்களை தடுத்துவைக்க அனுமதி தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.

Related Posts