Ad Widget

கைதாகிய 129 பேர் தொடர்பில் முன்னிலையாகப்போவதில்லை என நாங்கள் தீர்மானிக்கவில்லை!

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேர் தொடர்பில் நீதிமன்றில் ஆயராகப் போவதில்லை என தாங்கள் தீர்மானிக்கவில்லை என வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழில் மாணவி படுகொலை தொடர்பில் நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, நீதி வழங்கக் கூடிய நீதிமன்றம் தாக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் நீதிச் சேவை அடித்தளத்தை வீழ்த்திய ஒரு சம்பவமாக இருக்கின்றது. அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். நீதித்துறையிலே நம்பிக்கை இல்லை என்ற தன்மையை அது ஏற்படுத்தியுள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை. இலங்கை நீதி நிர்வாகத் துறையை பொறுத்தவரை எந்தவித ஐயமும் இல்லாமல் நீதியை வழங்கக் கூடிய ஒரு அமைப்பாக நீதி நிர்வாகத்துறை இருந்து வருகின்றது.

நீதிமன்றத்தை தாக்குவதன் மூலம் நீதியை கோரியவர்கள் எதை அடைய நினைத்தார்களோ எமக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக நீதித்துறையின் மகத்துவத்தை குறைத்துத்தான் நடந்துள்ளார்கள். அதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிலையில் இன்று யாழில் எமது சகோதர சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் பண்புறக்கணிப்பில் நாமும் உணர்வு பூர்வமாக பங்குகொண்டு ஆதரவை வழங்குகின்றோம்.

இதன்போது வித்தியா கொலை தொடர்பில் நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் வினா எழுப்பியபோது –

நாங்கள் விரும்பியவாறு எல்லாம் நீதி வழங்க வேண்டும் என கோருவது நியாயமில்லை. இலங்கை சட்டத்தின்படி நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். அவர்களை எம்மிடம் தாருங்கள் நாங்கள் நீதி வழங்குகின்றோம் என கோருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு காட்டுமிராண்டித்தனமானது. இலங்கை சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்றால் விதிக்கப்படும். ஆயுள் தண்டனைதான் விதிக்க முடியும் என்றால் அதுதான் வழங்க முடியும்.

வித்தியா கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. இதுபற்றி தங்களின் கருத்து என்ன எனக் கேட்டபோது –

எமது சங்கத்தில் அரசியல் இல்லை. ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அரசியல் இல்லை. அந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசியலில் இறங்குவார்களோ, இல்லையோ என்று எங்களுக்கு தெரியாது எனப் பதில் அளித்தார்.

நீதிமன்றை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்களும் அடங்குகிறார்கள். சிலர் தவறு செய்யாதவர்கள். இவ்வாறான நிலையில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் அவர்கள் சார்பாக முன்னிலையாகமாட்டாது என கூறியுள்ளது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்ன எனக் கேட்டபோது –

அவர்கள் சார்பாக முன்னிலையாகமாட்டோம் என நாம் தீர்மானம் எடுக்கவில்லை. அது யாழ். மாவட்டத்தில் எடுத்த முடிவு. வடமாகாணத்தில்தான் நாங்களும் இருக்கின்றோம். இருப்பினும் நாம் அப்படி எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை – என்றார்.

Related Posts