Ad Widget

கே.கே.எஸ் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை சேதமாக்கியதுடன் வலைகளையும் அறுத்து, 600 கிலோகிராம் நிறையுடைய மீன்களை எடுத்துச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை (01) இரவு திருகோணமலை பகுதியிலிருந்து வந்த தென்னிலங்கை மீனவர்கள் சிலர், பருத்தித்துறைக்கு வடமேற்கு கடற்பரப்பினுள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதன்போது கற்கள், பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு, இலங்கை மீனவர்களின் படகுகளையும் தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

பின்னர், இலங்கை மீனவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றி தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், அக்கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இலங்கை மீனவர்களைக் காப்பாற்றி, கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று முதலுதவிகளையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்கள், இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related Posts