Ad Widget

கேரளா டயரீஸ் நூலின் இரண்டாம் பாகத்தினை மிக விரைவில் யாழில் வெளியீடு செய்வேன் : ம. அருளினியன்

யாழில். சர்ச்சையை தோற்றுவித்த நூல் வெளியீடு யாழ்.நகர மத்தியில் உள்ள பிரபல விடுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.

ஆனந்த விகடனில், ம. அருளினியன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு கால பகுதியில் , மாணவ பத்திரிகையாளனாக இருந்த வேளை பெண் போராளி ஒருவர் பற்றிய நேர்காணல் ஒன்றினை எழுதி இருந்தார். அது அக்கால பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அந்நிலையில் ம. அருளினியன் யாழில். தான் எழுதிய நூல் ஒன்றினை நேற்றய தினம் வெளியிட இருந்தார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் யாழ். ஊடக அமையத்தில் , ஊடகவியலாளர்களை சந்தித்த ம. அருளினியன் “ஆனந்த விகடன் ஆசிரிய பீடத்தில் இருந்தவர்கள் என்னிடம் ஒரு தொலைபேசி அழைப்பை தந்து மறு முனையில் இருப்பவருடன் கதைத்து அவர் சொல்வதை எழுதி தா என கேட்டனர். நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் நேர்காணலை எடுத்தேன். அதனை அப்படியே எழுதி கொடுத்தேன். அதில் என்னுடைய வேலை அவர்கள் சொன்னதை செய்து கொடுத்தது தான். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. அவர் பாலியல் தொழில் செய்தாரா என்பது கூட எனக்கு தெரியாது. அந்த நேர்காணல் வெளிவந்ததால் , நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை.” என தெரிவித்தார்.

அத்துடன் தனது நூலினை நேற்றய தினம் திட்டமிட்டவாறு யாழ்.இந்துக் கல்லூரி மண்டபத்தில் திட்டமிட்ட நேரமான மாலை 4 மணிக்கு வெளியிடுவேன் என தெரிவித்தார்.

இந்நிலையிலேயே நேற்றய தினம் திடீரென யாழ்.நகர் மத்தியில் உள்ள விடுதியில் மதியம் 1 மணியளவில் நூலினை வெளியிட்டு உள்ளார்.

நூல் வெளியீட்டின் பின்னர் ஏற்புரையில் தெரிவிக்கையில் , நான் இதை தான் எழுத வேண்டும் என கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. நான் எழுதுவது தொடர்பில் மாற்று கருத்து இருந்தால் அதனை முன் வைக்கும் உரிமை உண்டு. அதே போன்று என் நூலினை தடுக்கும் உரிமையும் எவருக்கும் இல்லை. இந்த நூலின் இரண்டாம் பாகத்தினை மிக விரைவில் யாழில் வெளியீடு செய்வேன் என தெரிவித்தார்.

Related Posts