Ad Widget

கேக் விற்பனை நிலையத்தில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் நேற்று (7) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்”

இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தன.

அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, விற்பனைக்குத் தயாராகவிருந்த சுமார் 3 கிலோ கிராம் மாவா போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன. அதனை விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கேக் விற்பனை நிலையத்திலிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐந்து சந்தி கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. அதன்போது, பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பட்டப்பட்டதுடன், அதனைத் தயாரிக்கும் மூலப்பொருள்களும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Posts