Ad Widget

கெற்பேலி மயானத்தை மீட்டுத் தரக் கோரிக்கை; ஜனாதிபதிக்கு மக்கள் கடிதம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு அந்தப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கெற்பேலி மக்களால் இந்த மயானம் 1983 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய நிலங்களில் இருந்தும், மக்கள் குடியிருப்பில் இருந்தும் ஒதுக்குப்புறமாக இந்த மயானம் அமைந்திருப்பதால் நாங்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றோம்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் மக்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது குறித்த 35 வருடம், நாம் பயன்படுத்தி வரும் மயானத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்கள் குடியிருப்புக்கு அண்மையாகவும், விவசாய நிலங்களுக்கு அருகிலுமுள்ள காணியை மயானமாகப் பயன்படுத்துமாறும் பணித்துள்ளனர்.

எனவே நாம் கடந்த 35 வருடகாலமாக பயன்படுத்திய மயானத்தையே தொடர்ந்தும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேசசபைத் தலைவர் க.துரைராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது 35 வருடகாலம் மயானமாகப் பயன்படுத்தி வரும் காணி உண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய அரச காணி.

மக்கள் முன்னர் மயானமாகப் பாவித்த இடத்துக்கு அண்மையில் தற்போது குடியிருப்புகள் உள்ளதால் இதைப் பயன்படுத்த முடியாது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கெற்பேலியில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Posts